search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலவரையின்றி நீடிக்கும்"

    ஜன் தன் யோஜனா திட்டத்தை காலவரையின்றி நீட்டிக்கவும், அத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்கப்படுத்த புதிய சலுகைகள் வழங்கவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #JanDhanYojana
    புதுடெல்லி:

    ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டம், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போது காலவரையின்றி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.



    நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஜன் தன் யோஜனா திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதில், 32 கோடியே 41 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. அவற்றில் ரூ.81 ஆயிரத்து 200 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களில் 53 சதவீதம்பேர் பெண்கள். 83 சதவீத கணக்குகள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன.

    இந்த திட்டத்தை காலவரையின்றி நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.

    இதில், வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்கப்படுத்துவதற்காக, கூடுதல் சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்த ‘ஓவர்டிராப்ட்’ வசதி, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

    இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு உலக நிலவரமே காரணம். உள்நாட்டு காரணங்கள் எதுவும் கிடையாது. அமெரிக்க டாலருக்கு நிகரான எல்லா நாட்டு பணத்தின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நமது நாட்டு பணத்தின் மதிப்பு, வலிமை அடைவதும், அதே நிலையில் நீடிப்பதுமாக இருக்கிறது.

    அதே சமயத்தில், பவுண்டு, யூரோ போன்ற பணத்துக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவானதாகவே இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கூடுவதும், குறைவதுமாக இருக்கிறது. விலை உயரும்போது, தற்காலிக பாதிப்பு ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க, உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால், அது திடமான நடவடிக்கையாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JanDhanYojana
    ×